அனைவருக்கும் எனதுபொங்கல் திருநாளின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவோம் என்பது இழுக்கு.

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க ஒரு விஷயத்தை முடித்தே தீருவது மற்றும் முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன் என்று உறுதியுடன் இருப்பதுதான், கங்கணம் கட்டுதல் என்று கூறுவர். அதற்காக உயிரையும் கொடுப்பேன். அந்தக் காரியம் முடிந்தால்தான் அடுத்த காரியம் பார்ப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்வதன் மூலம் ஒரு காரியத்தில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்பதை நமக்கு நாமே உணர்த்திக் கொள்வதைத்தான் கங்கணம் கட்டுதல் என்பர்.

அதை அவ்வப் பொழுது நமக்கு உணர்த்தும் விதமாகவும், அடுத்தவருக்கு நாம் ஒருகாரியத்தில் இறங்கியுள்ளோம் என்பதை தெரிவிக்கும் விதமாகவும், கையில் ஒரு கயிற்றை கட்டிக் கொள்வதும் உண்டு.

நமக்கு விடாமுயற்சி இருந்தால், முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. எடுத்த காரியத்தை முடிக்க நமக்கு விழிப்புணர்ச்சியும் தூண்டுதலும் இருந்தால் போதும் எனச் சிலர் சொல்வதுண்டு, நாங்கள் மனதில் நினைத்து விட்டால் அவ்வளவுதான், எங்களுக்கு எதுக்கு கயிறு, இத்யாதி என்று, எங்களுக்கு எந்த விதமான புறத் தூண்டுதலும் வேண்டியதில்லை என்பார்கள். அந்தமாதிரி சொல்பவர்கள் நூறு சதவீதம் இருந்தால் அதை உண்மையில் செயலாற்றுபவர்கள் இரண்டு சதவீதம் கூட தேற மாட்டார்கள்.

ஆகவே புறத்தூண்டுதல் ஏதோ ஒரு வகையில் அவசியப் படுகிறது. சாதாரணமானவர்களுக்கு அந்த தூண்டுதலை அளிப்பது அந்தக் கயிறு அல்லது கங்கணம் தான். நாமே மறந்தாலும் அவ்வப் பொழுது நம்மை பார்ப்பவர்கள், அதைப் பற்றி கேட்பார்கள் அல்லது நினை வுறுத்துவார்கள். அதை வலியுறுத்தவே காரியம் ஆரம்பிப்பதற்கு முன் கங்கணம் கட்டப் படுகிறது. ஞாபக சக்தி உள்ளவர்கள் கங்கணம் கட்டிக் கொள்ளலாம். சஞ்சய் ராமசாமி மாதிரி ஆட்கள் நோட் எழுதி சுவற்றில் ஒட்டி வைத்துக் கொள்கிறார்கள்.

மைக்ரோசாப்ட் கூட இது பற்றி யோசித்து ஒரு நோட் ஒன்றை டெஸ்க் டாப்பில் வைத்திருக்கிறார்கள்.

விரதம் இருப்பவர்களும் கையில் கயிறு கட்டிக் கொள்வார்கள். அதனால் மற்றவர்கள் அவர்களது காரியத்தை தெரிந்து கொண்டு உதவி செய்யாவிட்டாலும், இடையூறு செய்ய மாட்டார்கள். அந்தக் காலத்தில் கயிறுதான் கட்டினார்கள். இப்பொழுது விரதம் இருந்து கோவிலுக்குச் செல்பவர்கள் உடையையே மாற்றி குறிப்பிட்ட வண்ணத்தில் அணிந்து கொள்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் பொழுது நல்லதோ கெட்டதோ நாம் தூர விலகிக் கொள்கிறோம்.

வெற்றியை உறுதிப் படுத்தும் கங்கணம் நாளடைவில் காப்பாக மாறிவிட்டது. ஆதி தமிழர்களும் இந்த வழக்கத்தை கொண்டிருந்தனர் என்பதற்கு மகர சங்கராந்தியை ஒட்டி கொண்டாடப் படும் பொங்கல் நாளுக்கு முதல் நாள் கூரைப்பூ, வேப்பந்தளை, மாவிலை, ஆவாரம் பூ ஆகியவை வைத்து வீட்டின் வாசல் மீது கட்டுவார்கள். இதை காப்புக் கட்டுதல் என்பர். அதாவது அந்த புனித நாளனறு எவ்வித கெட்ட சக்திகளும், நோய்களும் வீட்டை அண்டாதவாறு தடுப்பதற்கும் அவற்றிலிருந்து காப்பதற்கும் தான் அந்தக் காப்பு. வீட்டிற்கே காப்பு கட்டுபவர்கள் தங்களுக்கு கட்டிக் கொள்ள மாட்டார்களா?.

அந்தக் கயிறு கட்டும் பழக்கம் திருமணத்தில் இன்றும் கடைப்பிடிக்கப் படுகிறது. திருமணம் என்பது முக்கியமான காரியமல்லவா. அதிலும் சிலர் பெண்ணைக் கடத்தி வந்து திருமணம் செய்வது மிகப் பெரிய சாதனை. அதற்கு கங்கனம் கட்டிதான் காரியத்தில் இறங்குவார்கள். வீரதீரமான அந்த காரியத்திற்கு கங்கனம் தேவைதானே?. இல்லாவிட்டால் இவரை நம்பி(காதலித்த பெண்ணை விடுங்க) துணைக்கு இறங்கியவர்களை கை விட்டு விட்டு தப்பித்து விடுவார்கள். அதிலும் மந்திரம் சொல்லி கட்டப் படும் அந்த கயிற்றுக்கு மூன்றே முக்கால் நாழிகை சக்தியுள்ளதாகவும் நம்பிக்கையும் உள்ளது. கங்கணம் கட்டியவுடன் நம்மைச் சுற்றி ஒரு நெருப்பு உருவாகி விடுமோ? அதாவது நம்மை கெட்ட சக்திகள் எதுவும் (எமன் உட்பட) நெருங்காத வாறு பார்த்துக் கொள்ளுமாம். அதனால்தான் அதை காப்பு என்றும் அழைக்கிறார்கள். அந்த 90 நிமிடங்களில் காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டுமாம். அதனால்தான் முகூர்த்த நேரம் ஒன்றரை மணி நேரமாகப் பத்திரிக்கைகளில் குறிக்கப் படுகிறது. தாலி கட்டும் பொழுது சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப் படுத்துவதும் அதற்காகத்தான். ஒரு பக்கம் மூட நம்பிக்கையாக தோன்றினாலும் பாமரர்கள் காரியம் சாதிக்கப் பயன்படுகிறது.

நம்பிக்கை என்று வந்து விட்டாலே அது மூடத்தனம்தான். நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப் படும் அனைத்து காரியங்களும் மூட நம்பிக்கைதான்.

இதை ஒட்டி காதில் கேட்ட புராணக்கதை ஒன்று. தசரதன் திருமணத்திற்காக ( நாலாவதோ?) கங்கனம் கட்டி உட்கார்ந்திருந்த பொழுது ஏதோ ஒரு பிரச்னை காரணமாக சனீஸ்வரன் மேல் கோபம் ஏற்பட்டதாம். அதனால் சனீஸ்வரனை தண்டிக்க கிளம்பிவிட்டாராம். எல்லோரும் சமாதானப் படுத்தி திருமணத்தை நடத்தி வைத்தார்களாம். அதனால் கோபமுற்ற சனியின் மகன் குளிகன், தசரதனின் உயிரை எடுக்க வந்து விட்டானாம். தசரதன் கையில் கட்டியிருந்த கங்கணத்தைப் பார்த்துவிட்டு ”மகனே நீ மட்டும் கங்கணத்தை அவிழ்த்து விட்டு வா உயிரை எடுத்துவிடுகிறேன்” என்றானாம். அப்பனைக் கூட பகைத்துக் கொள்ளலாம் ஆனால் மகனை பகைக்க முடியாதே. குளிகனை மார்க்கண்டேயனை தவிர யாராலும் எதிர்க்க முடியாதே!. அதனால்தான் தசரதன் கங்கணத்தை அவிழ்க்காமல் தொடர்ச்சியாக திருமனத்தை செய்ததால் தான் அறுபதாயிரம் மனைவியர்கள் ஏற்பட்டார்கள். என்று கதை செல்லும். அது சரி இந்தக் காலத்திலும் நீண்ட ஆயுளுக்காக, இளம் பெண்ணை திருமணம் செய்யும் பெரியார்களும், மஞ்சள் துண்டு அணியும் பகுத்தறிவு கலைஞர்களும் இருக்கும் பொழுது, அந்தக் காலத்தில் கேட்க வேண்டுமா? ரைட்டு. அவனவன் கால கட்டத்தில் அவனவன் செய்யறது அவனவனுக்கு ரைட்டு

நீங்கள் ஒரு காரியம் செய்ய நன்றாக தீர்மானித்து இறங்குங்கள். குறைந்த பட்சம் மனத்தளவிலாவது கங்கணம் கட்டிக் கொள்ளுங்கள்.

காரியம்தான் முக்கியம் அடுத்தவரின் கருத்துக்கள் பிரதானமில்லை என்றால் அடையாளத்தை கட்டிக் கொள்ளுங்கள்.ஜெயிக்கலாம்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியராகப் பெறின்

திண்ணியராகும் வழிமுறைகளில் ஒன்றுதான் கங்கணம் கட்டிக் கொள்வது. கங்கணம் என்பது கயிறாகவோ, தங்கக்காப்பாகவோ இருக்கலாம். இலட்சியத்தை மட்டும் மறக்காமல் இருக்கவேண்டும்.


மேலும் படிக்க...!
top