தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றகுறையினால் ஒரு நாளைக்கு 8 லிருந்து 12 மணி நேரம் மின்வெட்டு அமுல் படுத்தப் பட்டது. இதனால் மக்கள் இதை சமாளிக்க வேறு வழியில்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.


அந்த வகையில் இராமன் ஆண்டால் என்ன இரவணன் ஆண்டால் நமக்கென்ன என்று எதையும் கண்டு கொள்ளாமல் நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளுக்கு 10,000 லிருந்து 30,000 வரை செலவு செய்து யுபிஎஸ் (இன்வர்ட்டர்கள்) வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வியாபாரிகளும், வசதி படைத்தவர்களும் லட்சக் கணக்கில் செலவு செய்து ஜென்செட் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். 


இதில் தமிழக மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் ஏற்படும் சங்கடங்களும், பொருளாதார பின்னடைவுகளும் அரசாங்கத்திற்கு தெரிவதில்லை, அதிகாரிகளுக்கும், யுபிஎஸ் பற்றிய மின்சாதன அறிவும், இதில் வீணாகும் தமிழகத்தின் பணத்தைப் பற்றிய அறிவும் , அக்கறையும் இல்லாமல் போய்விட்டது. புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி என்பது போல் அதிகாரிகள் உள்ளனர். மக்களோ வோட்டைப் போட்டு விட்டு, ஆப்பை பிடுங்கிய குரங்காக விழி பிதுங்கி இருக்கினறனர்.

 எனது நன்பர் "என் மாமன் மின்வாரியத்தில் பெரிய இன்சீனியரா இருக்கார் மின் வெட்டு பத்தி சொல்லியிருந்தா நானும் யுபிஎஸ் பிசினஸ் பண்ணி நாலு காசு பார்த்து இருக்கலாம்" என்று புலம்பினார். அது சரி அவராவது யுபிஎஸ் மாட்டியிருக்காரா என்று கேட்டேன். அவருக்கு ஒருவன் மாட்டி, விட்டு சென்று 5 வருடம் ஆகிறது என்றார்.

 மக்கள் அதிக அளவில் யுபிஎஸ் வாங்குவது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுது ஒரு நிறைவை (Saturation) எட்டிவிட்டது. இதனால் பெரிதும் பயன் பெற்றவர்கள் வட மாநிலத்தவரே. இந்த யுபிஎஸ், ஜென்செட் மற்றும் பேட்டரி அணைத்தும் (99 சதவீதம்) வட மாநிலங்களி லிருந்துதான் தமிழகத்திற்கு வருகின்றது. இதனால்தான் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது.

தமிழகத்தில் மட்டும் 2.24 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். அவர்களில் குறைந்தது 2 சதவீதம் என்று வைத்தாலே சுமார் 5,00,000 பேர் யுபிஎஸ்கள் வாங்கியிருக்கலாம். அதன் மூலம் மக்கள் பணம் சுமார் 1000 கோடி ரூபாய் வீணாகி இருக்கிறது. அதிலும் இதில் பேட்டரிக்கு செலவிடும் பணம் என்பது 3 வருட காலத்தில் குப்பையாகி விடும். அதாவது சுமார் 750 கோடி 3 வருடங்களில் குப்பையாகிவிடும். பாக்கி 250 கோடியும் 3 வருடங்களில் குப்பையாகி விடும்.



இதுவே 5 சதவீதமாக இருந்தால் 2500 கோடிரூபாய் மக்கள் பணம் செலவாகி இருக்கும். இதில் ஜென்செட் நிறுவிய வகையில் சுமார் 2500 கோடி செலவாகியிருக்கும். அரசாங்கத்தால் மக்களுக்கு குத்து மதிப்பாக 5,000 கோடி ரூபாய் மின்சாரத்திற்காக அதிகப் படியாக செலவாகி இருக்கலாம்.


சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதற்கிணங்க யுபிஎஸ் ஒன்றும் இலவசமாக வேலை செய்யாது. அந்தக் காலத்தில் நெல் அறுவடை செய்பவர்களுக்கு நெல்தான் கூலியாகக் கொடுக்கப் படும், அது போல் யுபிஎஸ், பேட்டரியை சார்ஜ் செய்யும் பொழுதும் , பேட்டரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் பொழுதும் 15+15=30 சதவீதத்தை கூலியாக எடுத்துச் சாப்பிட்டு விடும். அது மட்டுமில்லாமல் அதை 24 மணிநேரமும் மின்சாரம் வருகிறதா இல்லையா , வரவில்லை என்றால் மாற்றிக் கொடுக்கும் வாட்ச் மேன் வேலை பார்க்கச் சொல்வதால் அதற்கும் கூலி தரவேண்டும்.

லோகத்தில் (தமிழகத்தைத் தவிர)எதுவும் இலவசமா கிடைக்காது என்பதை கார்னாட் தொடங்கி ஐன்ஸ்டீன் வரை தெளிவா எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள் . அது தெரியாம மக்களுக்கு யுபிஎஸ் வாங்கிக் கொடுக்கலாம் என்று ஒரு மந்திரி சொன்னாராம்.

சென்ற வருடம் 1634 கோடி யூனிட்டுகள் மக்களுக்கு வினியோகிக்கப் பட்டுள்ளதாம். இந்த வருடம் 2000கோடி யூனிட்டுகள் செலவாகலாம். இதில் ஒரு 10 சதவீதம் யுபிஎஸ் மூலம் செலவழிப்பதாலும், அந்த பத்து சதவீதத்தில் 30 சதவீதம் என்பது சுமார் 70 கோடி யூனிட்டுகள் வெட்டியாக யுபிஎஸ் சாப்பிட்டு விடும். ஏற்கனவே நிறுவிய வகையில் 5000 கோடி (செலவினம்1), மக்கள் பாக்கெட்டிலிருந்து செலவழிக்கப் பட்டுள்ள நிலையில், யுபிஎஸ்கள் தின்று தீர்த்த வகையில் கணக்கு தொடர்கிறது. அதன் மதிப்போ வருடத்திற்கு 350 கோடி (செலவினம்2) ரூபாயாகும். இதுவும் மக்கள் தலையில்தான் விழுகிறது. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற கதையா எதையும் தாங்கும் இதயம் கொண்ட தமிழன் இருக்கவே இருக்கான்.

 இந்த 5,00,000 யுபிஎஸ்கள் நாள் முழுவதும் 24 மணிநேரமும் இயக்கத்தில் (வாட்ச் மேன் வேலையில்) இருந்தால் தான் அவை பயன்படும். அவை ஒவ்வொன்றும் ஒருமணி நேரத்திற்கு சுமார் 30 வாட்ஸ் மின் சக்தியை செலவழிக்கும். இதனால் ஒரு வருடத்திற்கு

(500,000 யுபிஎஸ்கள்X 24மணி X30வாட்ஸ், X 360நாட்கள்)/1000 =11,52,00,000 யூனிட்டுகள்.

11,52,00,000 யூனிட்டுகள் X 5.30ரூபாய்=61,05,60,000

சுமார் 60 கோடி(செலவினம் 3)ரூபாய் வெட்டித் தனமாக செலவு செய்யப் படுகிறது.

 இதனால் மக்களின் பணம் சுமார் 60 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு வீனாக செலவழிக்கப் படுகிறது. ஆக மொத்தத்தில் 3 வருடத்தில் 6200 கோடி (செலவினம் 1+(செலவினம் 2 +செலவினம் 3)*3 ) ரூபாய் எந்த விதமான உபயோகம் இல்லாமல் அதிகாரிகளின் மெத்தனத்தால் மக்களால் தண்டமாக செலவழிக்கப் படுகிறது. அதாவது ஒவ்வொரு தமிழனிடமும் சுமார் 1000 ரூபாய் பிடுங்கப் பட்டுள்ளது.

இதில் நான் ஏன் அதிகாரிகளை குற்றம் சொல்கிறேன் என்றால் யுபிஎஸ் என்பது மின்சாரத்தை தயாரித்துக் கொடுக்கும் சாதனம் என நினைத்துக் கொண்டார்களோ என்னவோ. யுபிஎஸ்ஸின் பயன்பாட்டால் ஏற்கனவே செலவழித்துக் கொண்டிருக்கும் மின்சாரத்திற்கு அதிகமாக 30 சதவீதம் மின்சாரத்தை தண்டம் கட்டி, மாதம் 500 ரூபாய் யுபிஎஸ், மற்றும் பேட்டரி தேய்மானச் செலவுடன் யுபிஎஸ் மூலம் மின்சாரம் எடுக்கிறார்கள் என்பதை மக்கள் வேண்டு மென்றால் அறியாமல் இருக்கலாம் ஆனால் மின்துறை பொறியாளர்களுக்குத் தெரியவில்லை என்றால் யாரைச் சொல்வது. இதையெல்லாம் அதிகாரிகள் முன்கூட்டியே, அதற்கான சரியான முதலீடு மற்றும் திட்டம் என அறிவுறுத்தி செயல் பட்டிருக்க வேண்டும்.

 மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல். ஆனால் படிக்காமல் பதவிக்கு வருகிற மந்திரிக்கு வரப் போகிற கமிஷன் தானே தெரியும் வேறென்ன தெரியப் போகிறது. படிச்சவங்களே பாட்டைக் கெடுக்கும் போது படிக்காதவர்கள் கெடுப்பதை பற்றி சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. படித்தவன் , ஒழுக்கம் உள்ளவன், நாட்டுப் பற்று உள்ளவன் அரசியல் வாதியாகவும் அதிகாரியாகவும் வர வேண்டும், அப்பொழுதுதான் நாடு வளமிக்கதாகவும், மக்கள் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.

நன்றி.

நிபா:  எல்லாத் தொடரையும் அரையும் குறையுமா முடித்த மாதிரி இதையும் முடித்துவிட்டீர்களா?

நான்: இதில் என்ன குறை உள்ளது?

நிபா: யுபிஎஸ் யின் அளவு என்ன? யாருக்கு எவ்வளவு தேவை ,அதன் பட்ஜெட் என்ன எப்படி நிறுவுவது.எங்கு வாங்கலாம்? போன்ற விஷயங்கள் இல்லையே

நான்: விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற கதையா இருக்கு, அதை ஏன் வாங்கக் கூடாது வாங்கினால் தமிழனுக்கு எவ்வளவு நஷ்டம் என்று விலாவாரியா எழுதிவிட்டு அதை வாங்குவது எப்படி என்று நானே எழுதலாமா? படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில் என்ற கதையாகிவிடாதா?

நிபா: ஓஹோ நீ எதுக்கு உன் வீட்டிற்கு வாங்கி மாட்டியிருக்கே? ஊருக்குத்தான் உபதேசமா?

நான்: அதனுடைய நிறை குறை பற்றி எழுத வேண்டுமென்றால் வாங்கித்தானே ஆகவேண்டும்.

நிபா: உன்னைப் போல் நிறை குறை ஆராய்ச்சி உள்ளவர்களுக்காவது பயன்படும் விதமாக எழுதலாமில்லையா?

நான் : நிறையப் பேர், நிறைய எழுதிட்டாங்க அதுவுமில்லாமல் மின்வெட்டும் தீர்ந்து விட்ட இந்த நேரத்தில் வாங்கச் சொல்லி தண்டம் இழுத்து வைக்கக் கூடாது.மந்திரி வேறு சொல்லிவிட்டார் இன்னும் இரண்டு மாதத்தில் மின் வெட்டு தீர்ந்துவிடும் என்று.

நிபா: யோவ் ரொம்ப பிகு பண்ணாதே எல்லோரும் எழுதுவதற்கு மேட்டர் இல்லாமல் இருக்கும் பொழுது மாதத்திற்கு ஒரு பதிவு எழுதற உனக்கு ஒரு மேட்டர் சொன்னா எழுது. நீ எப்படி யோசித்து வாங்கினாய் என்ற கதையை  எழுது.

நான்: மேட்டர் இருக்கு, நேரம் இல்லை. கடந்த ஒரு மாதமாக சென்னை மதுரை, பழனி, திண்டுக்கல் என்று சுற்றியதோடு மட்டுமில்லாமல் ஒருவாரத்தில்  காரோட்டப் பழகினது என்று பல விஷயங்களால் நேரமே கிடைக்கவில்லை. இதில் விண்டோஸ் 7 , ரிப்பேரான ஹார்டு டிஸ்க் என்று பல பிரச்னைகள் இதெல்லாம் எழுதுனா என்னவாகும்.சரி பார்ப்போம்., 


 இரா.சந்திர சேகர்,
 பழனி.

மேலும் படிக்க...!
top